சந்திரகாந்த மண்டபம் அமைத்துத் தங்குதல் 3221. | 'இறந்தார் பிறந்தார்' என, இன் உயிர் பெற்ற மன்னன், மறம் தான் உணர்ந்தான், அவண், மாடு நின்றாரை நோக்கி, ' "கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே, சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க" எனச் செப்புக' என்றான். |
இறந்தார் பிறந்தார் என - மரணமுற்றவன் மீண்டும் பிறந்தான் எனும்படியாய்; இன் உயிர் பெற்ற மன்னன் - தன் இனிய உயிரைப் பெற்ற இராவணன்; மறம் தான் உணர்ந்தான் - தன் வலிமையை உணர்ந்து கொண்டவனாய்; அவண் மாடு நின்றாரை நோக்கி - அங்குப் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து; "கறந்தால் என - பால் கறந்தால் சுரப்பது போன்று; நீர்தரு சந்திர காந்தத்தாலே - நீர் சுரப்பதாகிய சந்திர காந்தம் என்னும் கற்களாலே; சிறந்து ஆர் மணிமண்டபம் - சிறந்து விளங்கும் எழில் மிகு மணி மண்டபம் ஒன்றை; செய்க என - சமைக்க வேண்டும்' என; செப்புக என்றான் - சிற்பக் கலைஞரிடம் கூறுங்கள்" எனப் பணித்தான். சந்திரகாந்தம் - சந்திர கிரணம் பட்டதும் நீர் சொரியும் ஒரு வகைக்கல் சந்திர காந்தக் கல்லாலாகிய கட்டடம் பற்றி முன்னும் (122) கம்பர் குறித்திருக்கிறார். குளிர்ச்சியை நாடி இவ்வாறு கூறினான். செப்புக என்றது தெய்வச் சிற்பியைக் கருதிக் கூறியது. 155 |