3223.காந்தம், அமுதின் துளி
     கால்வன, கால மீனின்
வேந்தன் ஒளி அன்றியும்,
     மேலொடு கீழ் விரித்தான்;
பூந் தென்றல் புகுந்து
     உறை சாளரமும் புனைந்தான்;
ஏந்தும் மணிக் கற்பகச்
     சீதளக் கா இழைத்தான்.

    கால மீனின் வேந்தன் - விண்மீன்களின் தலைவனாகிய சந்திரன்;
ஒளி அன்றியும் அமுதின் துளி கால்வன - ஒளி படராத போதும் அமுத
நீரின் துளிகள் சிதறுவனவாகிய; காந்தம் மேலொடு கீழ் விரித்தான் -
சந்திர காந்தக் கற்களை மேலிருந்து கீழ் வரை அமைத்தான்; பூந் தென்றல்
புகுந்து உறை சாளரமும் புனைந்தான் -
பூ மணக்கும் தென்றல் காற்று
உள்ளே வரும்படியாகப் பலகணிகளும் உருவாக்கினான்; ஏந்தும் மணிக்
கற்பக -
விரும்பியவற்றை ஏந்தி அளிக்கும் மாணிக்கம் திகழும் கற்பக
மரங்களின்; சீதளக் கா இழைத்தான் - குளிர்ச்சியான சோலையையும்
உடன் அமைத்து வைத்தான் (விசுவகர்மா).

     சந்திர கிரணம் படாத போதும் நீர் சுரக்கும் சந்திர காந்தம் என்ற
சிறப்புமிக்க கற்களால் மண்டபம் அமைந்தது என வனப்பினை உயர்த்திக்
கூறினார்.                                                  157