3224. | ஆணிக்கு அமை பொன் கை, மணிச் சுடர் ஆர் விளக்கம் சேண் உற்ற இருள் சீப்ப, அத் தெய்வ மடந்தைமார்கள் பூணின் பொலிவார் புடை ஏந்திட, பொங்கு தோளான் மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான். |
ஆணிக்கு அமை பொன் கை - ஆணிப் பொன் அணிகலன்கள் அணிந்த கரத்தில்; மணிச் சுடர் ஆர் விளக்கம் - ஒளிச் சுடர் பொருந்திய விளக்குகளை எந்தி; பூணின் பொலிவார் - நகைகளை அழகுற அணிந்தவரான; அத் தெய்வ மடந்தை மார்கள் - அந்தத் தேவமங்கையர்; புடை ஏந்திட - இருபுறமும் எடுத்து வர; சேண் உற்ற இருள் சீப்ப - வான்முழுதும் செறிந்த இருள் சிதறி ஓட; பொங்கு தோளான் - விம்மிய (இருபது) தோள்களை உடைய இராவணன்; மாணிக்க மானத்திடை - ஒரு மாணிக்க விமானம் ஏறி; மண்டபம் காண வந்தான் - அம்மணி மண்டபம் காண வருகை தந்தான். தேவ மகளிர் மணி விளக்கெடுப்ப, இராவணன் மாணிக்க விமானத்தில் மணி மண்டபம் காண வந்தான். 158 |