3225. | அல் ஆயிரகோடி அடுக்கியது ஒத்ததேனும், நல்லார் முகம் ஆம், நளிர் வால் நிலவு ஈன்ற, நாமப் பல ஆயிரகோடி பனிச் சுடர் ஈன்ற, திங்கள் எல்லாம் உடன் ஆய், இருள் ஓட இரித்தது அன்றே. |
அல் ஆயிர கோடி அடுக்கியது ஒத்ததேனும் - ஆயிரம் கோடி இருட்டை அடுக்கியது போல் இருள் செறிந்திருந்ததாயினும்; நல்லார் முகம் ஆம் - தேவமாதரின் முகங்களான; நளிர் வால் நிலவு ஈன்ற - குளிர்ந்த வெண்ணிலவுகளில் பிறந்த; நாமப் பல் ஆயிர கோடி - பெருமைமிக்க பல கோடி நூறாயிரம்; பனிச் சுடர் ஈன்ற திங்கள் - குளிரொளி தரும் சந்திரப் பேரொளிகள்; எல்லாம் உடன் ஆய் - எல்லாம் ஓரிடத்தே திரண்டாற் போன்ற ஒளி பெருக; இருள் ஓட இரித்தது அன்றே - இருட்டு ஓடித் தோற்று மறைந்தது அன்றோ? அல் ஆயிரகோடி அடுக்கியது - தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. மகளிர் முகங்களால் இருள் ஒழிந்தது - உயர்வு நவிற்சி அணி. 159 |