3227. ஊறு, ஓசை, முதல் பொறி யாவையும்,
     ஒன்றின் ஒன்று
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன்;
     செய்கை ஓரான்;
வேறு ஆய பிறப்பிடை, வேட்கை
     விசித்தது ஈர்ப்ப,
மாறு ஓர் உடல் புக்கென,
     மண்டபம் வந்து புக்கான்.

    ஊறு - தொடுதல்; ஓசை - கேட்டல்; முதற் பொறியாவையும் -
முதலான உணர்வு தரும் ஐம் பொறிகளும்; ஒன்றின் ஒன்று தேறா நிலை-
ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து உணர முடியாத நிலையினை;
உற்றதோர் சிந்தையன் - அடைந்த குழப்ப மனம் படைத்தவன்; செய்கை
ஓரான் -
இன்னது செய்வதென விளங்காத இராவணன்; வேட்கை
விசித்தது ஈர்ப்ப -
ஆசை பற்றி இழுத்து வர; வேறு ஆய பிறப்பிடை -
மற்றொரு பிறவி எடுத்து (அப்பிறப்பில்); மாறு ஓர் உடல் புக்கென -
இன்னொரு உடல் கொண்டு வந்தவன் போல்; மண்டபம் வந்து புக்கான் -
சந்திர காந்த மண்டபம் அடைந்தான்.

     ஐம்பொறி உணர்வுகளும் நிலைகுலைந்தமையால் ஆற்றல் மிக்க
இராவணன் வேறொரு பிறவி எடுத்தவன் போல் வலிமையிழந்து காட்சி
தந்தான்.                                                    161