அறுசீர் ஆசிரிய விருத்தம் 3228. | தண்டல் இல் தவம் செய்வோர், தாம் வேண்டிய, தாயின் நல்கும் மண்டல மகர வேலை அமுதொடும் வந்ததென்ன, பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம் பொன் தண் தளிர் மலரின் செய்த சீதளச் சேர்க்கை சார்ந்தான். |
தண்டல் இல் தவம் செய்வோர் - விருப்பம் அழித்துத் தவம் புரிந்த தேவர்கள்; தாம் வேண்டிய தாயின் நல்கும் - எதனை விரும்பினாலும் தாயைப் போல் வழங்குகின்ற; மண்டல மகர வேலை - மகர மீன்கள் உலாவும் வட்ட வடிவமான பாற்கடல்; அமுதொடும் வந்தது என்ன - அமுத கலசத்தோடு வந்தாற்போல; பண்தரு சுரும்பு சேரும் - இசை பாடும் வண்டுகள் மொய்க்கும்; பசுமரம் உயிர்த்த- பச்சை மரங்களில் பிறந்த; பைம்பொன் தண்டளிர் - பொன்னிற இளந் தளிர்களாலும்; மலரின் செய்த - மலர்களாலும் சமைத்த; சீதளச் சேர்க்கை - குளிர்ச்சியான படுக்கை அமைந்திருக்க; சார்ந்தான் - (அதனை இராவணன்) அடைந்தான். அமுதப் பாற்கடல் போன்றிருந்த பூந்தளிர்ப் படுக்கை, தவம் பலனை எதிர் நோக்காது செய்யப்படுவது. ஆயினும் எதனையும் தரவல்லது. இதனைத் 'கண்டல் இல் தவம்' என்றார். 162 |