தென்றலைச் சீறல்

3229.நேரிழை மகளிர் கூந்தல் நிறை
     நறை வாசம் நீந்தி,
வேரி அம் சரளச் சோலை
     வேனிலான் விருந்து செய்ய,
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்தென,
     ஒருவர் ஆவி
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல்
     வந்து இறுத்தது அன்றே.

    நேரிழை மகளிர் கூந்தல் - நல்ல அணிகலன்கள் அணிந்த
பெண்களின் கூந்தலில்; நிறை நறை வாசம் நீந்தி - நிறைந்த (மலர்களின்)
தேனும் மணமும் தோய்ந்து; வேரி அம் சரளச் சோலை - நறுமணம்
நிரம்பிய அழகிய இனிய சோலைகளில்; வேனிலான் விருந்து செய்ய -
மன்மதனுக்கு விருந்து வைக்கும் முகத்தான்; ஆர்கலி அழுவம் தந்த
அமிழ்தென -
ஓசைமிக்க கடல் உவந்தளித்த அமுதம் போன்றதும்;
ஒருவர் ஆவி தீரினும் - ஒருவர் உயிர் போகும் பொழுதிலும்; உதவற்கு
ஒத்த -
அதனை மீட்டுத் தர வல்லதான; தென்றல் - தென்றற் காற்று;
வந்து இறுத்தது - அங்கு வந்து சேர்ந்தது (அன்றே - அசை).

     உயிர் போகும் போதும் மீட்டுத் தரும் இனிய தென்றல் இங்கு
இராவணன் உயிரைப் பறிப்பது போல் வந்தது தோன்ற இவ்வாறு கூறினார்.
                                                           163