3230. | சாளரத்தூடு வந்து தவழ்தலும், தரித்தல் தேற்றான்; நீள் அரத்தங்கள் சிந்தி, நெருப்பு உக, நோக்கும் நீரான்; வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வரக் கண்டன்ன கோள் உறக் கொதித்து விம்மி, உழையரைக் கூவிச் சொன்னான்: |
நீள் அரத்தங்கள் சிந்தி - நெடிய இரத்தத் துளிகள் சிந்தி; நெருப்பு உக - தீப்பொறிகளும் கக்கும்படி; நோக்கும் நீரான்- சினமுடன் பார்க்கும் கண்கள் கொண்ட இராவணன்; சாளரத்தூடு வந்து தவழ்தலும் - (தென்றல்) பலகணி வழியே வந்து பாயவும்; தரித்தல் தேற்றான் - பொறுக்க இயலாதவனாய் ஆனான்; வாழ்மனை ஆண்டு - வாழும் இல்லத்தின்கண்; ஓர் மாகணம் புகுந்தது வரக் கண்டன்ன - ஒரு மலைப் பாம்பு நுழைந்து வரக் கண்டது போல்; கோள் உறக் கொதித்து - துன்பம் கொண்டு சினமுற்று; விம்மி - கலங்கி; உழையரைக் கூவிச் சொன்னான்- பணியாளரைக் கூப்பிட்டுப் பின் வருமாறு கூறினான். மலையினின்று வரும் மலய மாருதமான தென்றலை மலைப் பாம்பாகக் குறிப்பிட்டார். தென்றல் என்றதற்கேற்ப அதன் அசைவினைத் தவழ்தல் என்றார். 164 |