3231.'கூவலின் உயிர்த்த சில் நீர்
     உலகினைக் குப்புற்றென்ன,
தேவரில் ஒருவன் என்னை
     இன்னலும் செயத்தக்கானோ?
ஏவலின் அன்றி, தென்றல்
     எவ் வழி எய்திற்று' என்னா,
'காவலின் உழையர்தம்மைக் கொணருதிர்
     கடிதின்' என்றான்.

    கூவலின் உயிர்த்த சில் நீர் - கிணற்றில் தோன்றிய சிறிதளவு
தண்ணீர்; உலகினைக் குப்புற்றென்ன - உலகத்தை மூழ்கடித்தது என்றாற்
போல; தேவரில் ஒருவன் - (எனக்கு ஆட்பட்ட) தேவரில் ஒருவனாகிய
வாயு; என்னை இன்னலும் செயத் தக்கானோ - எனக்கே தீமையும்
செய்ய வல்லவன் ஆகிவிட்டானோ; ஏவலின் அன்றி - என்
கட்டளையின்றி; தென்றல் எவ்வழி எய்திற்று - எவ்வாறு தென்றல் இங்கு
வந்தது; என்னா - என்று (இராவணன்) வினவி; காவலின் உழையர்
தம்மை -
காவல் பணியாளர்களை; கடிதின் கொணருதிர் - விரைவாக
அழையுங்கள்; என்றான் - எனக் கூறினான்.

     கிணற்று நீர் உலகை மூழ்கடித்தாற் போல ஒரு தேவன் எனக்கு
இன்னல் செய்தான் என்று ஏளனமாய் உரைத்தான் இராவணன்.        165