3233.'வேண்டிய நினைந்து செய்வான்
    விண்ணவர் வருவது என்றால்,
மாண்டது போலும் கொள்கை,
     யானுடை வன்மை? வல்லைத்
தேண்டி நீர் திசைகள்தோறும்
     சேணுற விசையில் செல்குற்று
ஈண்டு இவன் தன்னைப் பற்றி,
     இருஞ்சிறை இடுதிர்' என்றான்.

    வேண்டிய நினைந்து செய்வான் - தாங்கள் விரும்பியவாறு
எண்ணிச் செயல்பட; விண்ணவர் வருவது என்றால் - தேவர்கள்
வருவார்கள் என்றால்; யானுடை வன்மைக் கொள்கை - என்னுடைய
ஆற்றற் கோட்பாடு; மாண்டது போலும் - அழிந்து போனது போலும்;
வல்லைத் தேண்டி - விரைவாக எங்கும் தேடி; திசைகள் தோறும் -
எட்டுத்திசைகளிலும்; வேணுற விசையில் செல்குற்று - தொலை
தூரங்களிலும் வேகமாய்ச் சென்று; இவன் தன்னைப் பற்றி - வாயு
தேவனைப் பிடித்து; நீர் - நீங்கள்; ஈண்டு இருஞ்சிறை இடுதிர் - இங்கே
பெருஞ்சிறைச் சாலையில் தள்ளுமின்; என்றான் - என்று இராவணன்
மொழிந்தான்.

     காற்றைப் பிடித்துக் கடுஞ்சிறையில் இட இராவணன் ஆணையிட்டான்.
                                                           167