அமைச்சரோடு ஆராய்தலும் மாரீசனை அடைதலும் 3234. | 'காற்றினோன்தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை; கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால், குறித்த ஆற்றால் வேல் தரும் கருங் கட் சீதை மெய் அருள் புனையேன்என்றால்; ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரைக் கொணர்திர்' என்றான். |
காற்றினோன் தன்னை - வாயு பகவானை; வாளா - வறிதே; முனிதலின் கண்டது இல்லை - சினப்பதனால் ஒரு பயனும் இல்லை; குறித்த ஆற்றால் - நான் திட்டமிட்டபடி; வேல் தரும் கருங் கண் சீதை- வேல் போலும் கரிய கண்களை உடைய சீதையின்; மெய் அருள் புனையேன் என்றால் - உண்மையான அன்பை நான் அடைய வில்லையெனில்; இன்னே - இப்பொழுதே; கூற்றும் வந்து என்னைக் குறுகும் - காலனும் என்னை நெருங்கி வந்து விடுவான்; எனவே; ஆற்றலால் அடுத்தது எண்ணும் - தம் வல்லமையால் வருங்காலத்தை உணரவல்ல; அமைச்சரைக் கொணர்திர் - மந்திரிமார்களை அழைத்து வாருங்கள்; என்றான் - என (இராவணன்) பணித்தான். ஆல் - அசை. என் வல்லமையால் சீதையைப் பெறவில்லையானால் காற்றைப் போலவும் கூற்றும் துன்பம் செய்ய வந்து விடுவதில் வியப்பதற்கில்லை என இராவணன் கருதினான். 168 |