3235. ஏவின சிலதர் ஓடி, 'ஏ' எனும்
     துணையில், எங்கும்
கூவினர்; கூவலோடும் குறுகினர் -
     கொடித் திண் தேர்மேல்,
மாவினில், சிவிகை தன்மேல், மழை
     மதக் களிற்றின் - வையத்
தேவரும், வானம் தன்னில் தேவரும்,
     சிந்தை சிந்த.

    ஏவின சிலதர் ஓடி - கட்டளையைப் பெற்ற பணியாளர் விரைந்து;
எனும் துணையில் -
ஏ எனும் முன்னர்; எங்கும் கூவினர் - எங்கணும்
சென்று அமைச்சரை அழைத்தனர்; கூவலோடும் - அவ்வாறு
அழைத்ததும்; வையத் தேவரும் - உலகின் கண் உள்ள முனிவரும்;
வானம் தன்னில் தேவரும் - விண்ணுலகத் தேவரும்; சிந்தை சிந்த -
மனம் துணுக்குற; (அமைச்சர்கள் எல்லாம்); கொடித் திண் தேர் மேல் -
கொடி அசையும் வலிய தேர்கள் மேலும்; மாவினில் - குதிரைகள் மேலும்;
சிவிகை தன் மேல் - பல்லக்குகளின் மேலும்; மழை மதக் களிற்றில் -
மழையென மதம் பொழியும் யானைகள் மேலும் (பயணம் செய்து); குறுகினர்-
இராவணனை அடைந்தனர்.

     இராவணன் ஆணையின் வலிமையும், அமைச்சர் அறிவின்
வலிமையும் சேர்ந்தால் ஏதாகுமோ எனத் தேவரும் முனிவரும் அஞ்சினர்.
                                                           169