'வந்த கருத்து என்?' என, மாரீசன் வினவுதல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3237.இருந்த மாரீசன், அந்த
     இராவணன் எய்தலோடும்,
பொருந்திய பயத்தன், சிந்தை
     பொருமுற்று வெருவுகின்றான்,
கருந் தட மலைஅன்னானை எதிர்கொண்டு,
     கடன்கள் யாவும்
திருந்திய செய்து, செவ்வித் திருமுகம்
     நோக்கிச் செப்பும்:

    அந்த இராவணன் எய்தலோடும் - அந்த (அரக்கர் தலைவன்)
இராவணன் சென்று சேர்ந்தவுடன்; இருந்த மாரீசன் - அங்கிருந்த மாரீசன்;
பொருந்திய பயத்தன் - அச்சம் அடைந்தவனாய்; சிந்தை பொருமுற்று -
மனம் வெதும்பி; வெருவுகின்றான் - கலக்கம் அடைந்தவனாய்; கருந்தட
மலை அன்னானை -
கரிய பெரிய மலை போன்ற இராவணனை; எதிர்
கொண்டு -
முன் சென்று வரவேற்று; கடன்கள் யாவும் திருந்திய செய்து
-
சிறப்பான முறையில் உபசரணைகள் ஆற்றி; செவ்வித் திருமுகம்
நோக்கி -
பொலிவு மிக்க இராவணன் முகம் பார்த்து; செப்பும் - பேசத்
தொடங்கினான்.

     தவநெறி மேற்கொண்டிருந்த மாரீசனுக்கு இராவணன் தனித்த வருகை
மனத்தில் அச்சத்தை மூட்டியது.                                   1