கலிநிலைத் துறை 3238. | 'சந்த மலர்த் தண் கற்பக நீழல் தலைவற்கும், அந்தகனுக்கும், அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய்! இந்த வனத்து, என் இன்னல் இருக்கைக்கு, எளியோரின் வந்த கருத்து என்? சொல்லுதி' என்றான்-மருள்கின்றான். |
மருள்கின்றான் - (எதற்காக இராவணன் வந்தானோ என) மயங்குகின்ற மாரீசன்; சந்த மலர்த்தண் - அழகிய குளிர்ந்த மலர்களை உடைய; கற்பக நீழல் தலைவற்கும் - கற்பக மர நிழலில் அரசாளும் இந்திரனுக்கும்; அந்தகனுக்கும் - எமனுக்கும்; அஞ்ச - அச்சம் வரும்படி; அடுக்கும் அரசாள்வாய் - மேல் நெருங்கி அரசாட்சி புரிபவனே; இந்த வனத்து - இந்தக் காட்டுக்குள்; என் இன்னல் இருக்கைக்கு - என் துன்பம் மிக்க குடியிருப்பை நாடி; எளியோரின் - யாருமற்ற எளியோரைப் போல; வந்த கருத்து என் - நீ வந்ததன் நோக்கம் யாது?; சொல்லுதி என்றான் - எடுத்துரைப்பாயாக' என்று கூறினான். தன் குடியிருப்பை இன்னல் இருக்கை என்றது, காட்டுக்குள் வசதி இல்லாத தவச்சாலை என்பது பற்றி. இந்திரனையும் அந்தகனையும் இணைத்துக் கூறியது, இராவணனின் தலைமையையும், அழிக்கும் திறனையும் இணைத்துக் கூறியவாறாம். 2 |