இராவணன் சீதையைக் கவரத் துணையாகுமாறு வேண்டுதல்

3239.'ஆனது அனைத்தும்; ஆவி
     தரித்தேன், அயர்கின்றேன்;
போனது, பொற்பும்; மேன்மையும்
     அற்றேன், புகழோடும்;
யான் அது உனக்கு இன்று எங்ஙன்
     உரைக்கேன் இனி?' என்னா,
'வானவருக்கும் நாண அடுக்கும்
     வசை மன்னோ?'

    அனைத்தும் ஆனது - (நிகழ வேண்டாதன) பலவும் நிகழ்ந்து
விட்டன; ஆவி தரித்தேன் - எனினும் உயிர் பிழைத்திருந்தேன்; அயர்
கின்றேன் -
இன்னும் தளர்ச்சியுறுகின்றேன்; பொற்பும் போனது - என்
பொலிவும் நீங்கியது; புகழோடும் மேன்மையும் அற்றேன் - என்
பெருமைகளும், புகழும் அகன்றன; யான் இன்று உனக்கு - நான்
இப்போது உன் பால்; இனி அது எங்ஙன் உரைக்கேன் - இனி அது பற்றி
எவ்வாறு எடுத்துச் சொல்வேன்?; என்னா - என்று கூறி; வானவருக்கும் -
தேவர்களுக்கும்; நாண அடுக்கும் வசை - வெட்கம் ஏற்படுத்தும் இழிவு
அது என்றான். (மன்னோ - அசை).

     மாரீசனின் அன்பைப் பெறும் பொருட்டுத் தன் நிலையை இவ்வாறு
தாழ்த்தித் தெரிவித்தான், இராவணன்                              3