3240.'வன்மை தரித்தோர் மானிடர்; மற்று
     அங்கு, அவர் வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும்
     நிலை நேர்ந்தார்;
என் மரபுக்கும் நின்
     மரபுக்கும் இதன்மேல் ஓர்
புன்மை, தெரிப்பின், வேறு இனி
     எற்றே? புகல்-வேலோய்!

    வேலோய் - வேலேந்தியவனே; மானிடர் வன்மை தரித்தோர் -
மனிதர்கள் வல்லமை உடையோர் ஆயினார்; மற்று அங்கு அவர் -
மேலும் அக்கானகத்தில் அவர்கள்; வாளால் - தம் வாள் வலிமையால்;
நின் மருகிக்கும் - உன் மருமகள் முறைமை வாய்ந்த சூர்ப்பணகைக்கும்;
நாசி இழக்கும் நிலை - மூக்கை இழக்கின்ற நிலையினை; நேர்ந்தார் -
உண்டு பண்ணிவிட்டனர்; தெரிப்பின் - ஆய்ந்து பார்த்தால்; என்
மரபுக்கும் -
என் பரம்பரைக்கும்; நின் மரபுக்கும் - (எனக்கு உறவாகிய)
உன் பரம்பரைக்கும்; இதன் மேல் ஓர் புன்மை - இதனைக் காட்டிலும்
ஒரு பேரிழிவு; இனி வேறு எற்றே - இனி வேறு என்ன இருக்கிறது;
புகல்- சொல்லுவாயாக.

     மானுடர் என இராமலக்குவரைக் குறித்தான். மாரீசன் மாமன் முறை
என்பதால் சூர்ப்பணகையை மருகி என்றான்.                      4