3242. | 'வெப்பு அழியாது என் நெஞ்சும் உலர்ந்தேன், விளிகின்றேன். ஒப்பு இலர் என்றே, போர் செயல் ஒல்லேன்; உடன் வாழும் துப்புஅழி செவ் வாய் வஞ்சியை வௌவ, துணை கொண்டிட்டு இப் பழி நின்னால் தீரிய வந்தேன், இவண்' என்றான். |
வெப்பு அழியாது - (முற்கூறிய நிகழ்ச்சியால்) மனத்தின் வெப்பம் தணியாமல்; என் நெஞ்சும் உலர்ந்தேன் - என் உள்ளமும் வாடினேன்; விளிகின்றேன் - உயிரும் அழிகின்றேன்; ஒப்பு இலர் என்றே - அம்மானுடர் என் ஆற்றலுக்கு நிகர் ஆகாதார் என்பதால்; போர் செயல் ஒல்லேன் - அவர்களோடு போரிடவும் விருப்பம் கொள்ளேன்; உடன் வாழும் துப்பு அழி செவ்வாய் - பவளத்தை வெல்லும் சிவந்த இதழ்களை உடைய; வஞ்சியை வௌவ - சீதையைக் கவர்ந்து வர; துணை கொண்டிட்டு - உன் உதவியை மேற்கொள்ள வேண்டியும்; இப்பழி நின்னால் தீரிய - எனக்கு நேர்ந்த அவமானத்தை உன்னால் துடைப்பதற்கு வேண்டியும்; இவண் வந்தேன் - இங்கு (உன்பால்) வந்தேன்; என்றான் - என்று இராவணன் மொழிந்தான். என்னுடைய சகோதரியை அவர்கள் இழிவுபடுத்தியதால்அவர்களுடன் இருக்கும் சீதையைக் கவர்ந்து அவர்களைஇழிவுபடுத்துவேன் எனத் துணை நாடினான் இராவணன். 6 |