மாரீசன் அறிவுரை

3243. இச் சொல் அனைத்தும் சொல்லி,
     அரக்கன், எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன்
     என்னக் கிளராமுன்,
'சிச்சி' என, தன் மெய்ச் செவி
     பொத்தி; தெருமந்தான்;
அச்சம் அகற்றி, செற்ற
     மனத்தோடு அறைகின்றான்;

    எரிகின்ற கிச்சின் - பற்றி எரியும் தீயில்; உருக்கு இட்டு -
இரும்பைப் போட்டுக் காய்ச்சி; உய்த்தனன் என்ன - அதனைச் செவியில்
பாய்ச்சினாற் போன்று; அரக்கன் - இராவணன்; இச்சொல் அனைத்தும்
சொல்லி -
இவ்வாறு (தன் உணர்வுகளைச் சுமந்த) சொற்களை எல்லாம்
கூறி; கிளராமுன் - தூண்ட முற்படு முன்; (மாரீசன்); சிச்சி எனத்தன்
மெய்ச் செவி பொத்தி -
சீச்சீ என்று தன் செவிகளை மூடி; தெருமந்தான்
-
தடுமாறினான்; (அதன் பிறகு); அச்சம் அகற்றி - இராவணனிடம்
கொண்ட பயத்தை நீக்கி; செற்ற மனத்தோடு - சினம் பொங்கும்
உள்ளத்தோடு; அறைகின்றான் - சொல்லத் தொடங்கினான்.

     கிச்சு - நெருப்பு; கிருசாநு என்ற வடசொல்லின் திரிபு என்பர்,
உருக்கு - உருக்கப்படுவதால் பெற்ற காரணப் பெயர்.                 7