3244.'மன்னா! நீ உன் வாழ்வை
     முடித்தாய்; மதி அற்றாய்;
உன்னால் அன்று ஈது; ஊழ்வினை
     என்றே உணர்கின்றேன்;
இன்னாவேனும் யான் இது
     உரைப்பென் இதம்' என்னா,
சொன்னான் அன்றே அன்னவனுக்குத்
     துணிவு எல்லாம்.

     'மன்னா - வேந்தனே; நீ உன் வாழ்வை முடித்தாய் - நீ உன்
வாழ்க்கைக்கு முடிவு தேடிக் கொண்டாய்; மதியற்றாய் - அறிவை அழித்து
விட்டாய்; உன்னால் அன்று ஈது - இந்நிலை உன்னால் உண்டானதல்ல;
ஊழ்வினை என்றே உணர்கின்றேன் - விதியின் வலியென்றே
கருதுகின்றேன்; இன்னா வேனும் - உனக்கு இனிமையான
வையல்லவெனினும்; யான் இது இதம் உரைப்பென் - நான் இதனை
உனக்கு நலம் கருதிக் கூறுவேன்; என்னா - என, (மாரீசன்);
அன்னவனுக்கு - இராவணனுக்கு; துணிவு எல்லாம் - உறுதிப்
பொருள்கள் எல்லாம்; சொன்னான் - கூறலானான் (அன்றே - தேற்றம்)

     இராவணனின் தவறான மனநிலைக்கு விதிதான் காரணமென உணர்ந்து
கூறினான் மாரீசன். ஆவது அறிவதே அறிவு; இராவணன் அழிவுக்கு வழி
தேடுவதால் 'மதியற்றாய்' என்றான்.                              8