3245.'அற்ற கரத்தோடு, உன் தலை நீயே
     அனல் முன்னில்
பற்றினை உய்த்தாய்; பற்பல
     காலம் பசி கூர
உற்று, உயிர் உள்ளே தேய, உலந்தாய்;
     பினை அன்றோ
பெற்றனை செல்வம்? பின் அது
     இகழ்ந்தால் பெறல் ஆமோ?

    அற்ற கரத்தோடு - (வாள் கொண்டு வெட்டி) அறுத்த கைகளோடு;
உன்தலை - உன் தலைகளையும்; நீயே அனல் முன்னில் - நீயே யாக
நெருப்பில்; பற்றினை உய்த்தாய் - எடுத்து இட்டாய்; பற்பல காலம் - மிக
நெடுங்காலம்; பசிகூர உற்று - பட்டினி நோன்பு இருந்து; உயிர் உள்ளே
தேய உலந்தாய் -
உயிர் உடலில் வாடும்படி துன்புற்றாய்; பினை
அன்றோ -
(இவ்வாறு தவம் செய்த) பிறகு அல்லவா; செல்வம் பெற்றனை
-
திருவெல்லாம் உற்றாய்; பின் அது இகழ்ந்தால் - இத்தவப்
பயனையெல்லாம் அலட்சியப்படுத்தினால்; பெறல் ஆமோ? - மீண்டும்
அவற்றைப் பெறுதல் முடியுமோ? (முடியாது)

     கோகர்ண ஆசிரமத்தில் ஆயிரம் ஆண்டு பட்டினித் தவம் புரிந்த
இராவணன், ஒவ்வோர் ஆயிரம் ஆண்டுக்கும் ஒரு சிரமும் இருகரமும்
அறுத்து, ஒன்பதினாயிரம் ஆண்டு தவம் புரிந்தான். கடைசித் தலையையும்
கரங்களையும் வெட்ட முற்படுகையில் பிரமன் தோன்றி இழந்தன எலாம்
தந்து வரங்களும் அருளினான். உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண்
செய்யாமை ஆகிய இரட்டை இலக்கணம் கொண்டது தவம். உற்ற நோய்
நோன்ற இராவணன் உயிர்க்கு உறுகண் தேட முயல்வது கண்டு வருந்திப்
பேசுகிறான், மாரீசன்.                                            9