3247. | 'நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார், நடை அல்லா வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும் தாரம் கொண்டார், என்ற இவர்தம்மைத் தருமம்தான் ஈரும் கண்டாய்; கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா! |
'நாரம் கொண்டார் - அன்பு பூண்டாரது; நாடு கவர்ந்தார் - நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்களும்; நடை அல்லா - நீதி நெறிக்குப் பொருந்தாத; வாரம் கொண்டார் - வரிப் பொருளை (க் குடிமக்களை வருத்திப்) பெற்றவர்களும்; மற்றொருவற்காய் - பிறர் ஒருவருக்கு உரிமையாய்; மனை வாழும் தாரம் கொண்டார் - அவர் இல்லத்திலே வாழும் மனைவியை வசப்படுத்திக் கொண்டவரும்; என்றிவர் தம்மை - எனப்படும் இவர்களை; தருமம் தான் - அறக் கடவுள்தானே; ஈரும் கண்டாய் - (சின்னா பின்னமாக்கி) அழித்து விடுவான் என அறிவாய்; ஐயா - தலைவனே; கண்டகர் உய்ந்தார் எவர் - கொடியவருள் எவர் தப்பிப் பிழைத்துள்ளார்?' (எவரும் இல்லை). பிறன் மனை விழைவோர். அன்புடையோரின் நாடு கவர்ந்தோர், கொடிய வரி வாங்குவோர் மூவரையும் கண்டகர் என ஓரினப்படுத்தினான். கண்டகர் - முள் போல் பிறரைத் துன்புறுத்துவோர். 11 |