3248. | 'அந்தரம் உற்றான், அகலிகை பொற்பால் அழிவுற்றான், இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார்? செந் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார்; மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய்; மதி அற்றாய். |
'அந்தரம் உற்றான் - வானுலகுக்கு உரிய இந்திரன்; அகலிகை பொற்பால் அழிவுற்றான் - அகலிகை அழகினால் பெருமை அழிந்தான்; இந்திரன் ஒப்பார் - அவ்விந்திரனுக்கு ஒப்பானவர்கள்; எத்தனையோர்தாம் - எத்தனையோ பேர்கள்; இழிவுற்றார் - (பிறன் மனை நயத்தலால்) தீமையுற்றவர்கள்; மதியற்றாய் - அறிவு இழந்தவனே; செந்திரு ஒப்பார் - திருமகளுக்கு நிகரானவர்கள்; எத்தனையோர் நின்திரு உண்பார் - எத்தனையோ பெண்கள் (விரும்பி) உன் செல்வத்தை அனுபவிக்கின்றார்கள்; (அவ்வாறிருக்க) ; மந்திரம் அற்றார் - அறிவுரை கூறும் நல்லமைச்சரைப் பெறாதார்; உற்றது உரைத்தாய் - பேசத்தக்க ஒன்றை (நீயும்) பேசுகின்றனையே. இந்திரன் அகலிகை கதை பால காண்டத்துள் அகலிகைப் படலத்தில் எடுத்துரைத்தார். உன்னை விரும்புவோர் பலரிருக்க, அழிவும் இழிவும் தருமாறு பிறன் மனை நயத்தல் ஏன் என மாரீசன் வினவினான். நல்லுரை கூறும் அமைச்சர் உனக்கு வாய்க்கவில்லையா? அன்றி அமைச்சர்களின் அறிவுரையை நீ மதிக்கவில்லையோ என்று கேளாமல் கேட்கிறான் மாமன் மாரீசன். 12 |