3249.'செய்தாயேனும், தீவினையோடும்
     பழி அல்லால்
எய்தாது, எய்தாது; எய்தின், இராமன்,
     உலகு ஈன்றான்,
வைதால் அன்ன வாளிகள் கொண்டு,
     உன் வழியோடும்
கொய்தான் அன்றே, கொற்றம்
     முடித்து, உன் குழு எல்லாம்?

    'செய்தாயேனும் - (என் கருத்தை மீறி) நீ செயல்பட்டாலும்; தீ
வினையோடும் பழி அல்லால் -
பாவமும் பழியும் அன்றி (வேறு நன்மை);
எய்தாது எய்தாது - உனக்கு நிச்சயம் கிடைக்காது; எய்தின் - ஒருவேளை
உன் எண்ணப்படி (சீதையைச் சிறைபிடிப்பதில் வெற்றி பெற்றாலும்; உலகு
ஈன்றான் இராமன் -
உலகையெல்லாம் படைத்தளிக்கும் இராமபிரான்;
வைதால் அன்ன வாளிகள் கொண்டு - (முனிவர்) சாபம் போன்ற கூரிய
அம்புகளால்; உன்குழு எல்லாம் - உன் இனம் முழுவதையும்; உன்
வழியோடும் -
உன் சந்ததிகளோடும் சேர்த்து; கொற்றம் முடித்து -
உங்கள் வெற்றி (வரலாறு) முடித்து; கொய்தான் அன்றே - நிச்சயமாய்
அழித்துவிடுவான்.

     பாவம் மறுமையையும், பழி இம்மையையும் அழிக்கும் என்பது
கருத்து. உன்னால் உன் குலமும் அழியும் என எச்சரித்தான்.

     வைதாலன்ன வாளிகள் - பால காண்டம் தாடகை வதைப் படலத்தில்,
'சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம்' (378) என்பதனோடு ஒப்பு
நோக்கத்தக்கது. எய்தாது, எய்தாது - அடுக்கு, உறுதியை வலியுறுத்தியது.
நிகழ்ந்தே தீருமென்ற உறுதியால் கொய்தான் என்று இறந்த காலத்தில்
குறித்தான்; கால வழுவமைதி.                                    13