3250. | 'என்றால், என்னே! எண்ணலையே நீ, கரன் என்பான், நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை? அம்மா! தன் தானைத் திண் தேரொடும் மாளத் தனு ஒன்றால் கொன்றான்; முற்றும் கொல்ல, மனத்தில் குறிகொண்டான். |
என்றால் - இவ்வாறு நான் அறிவுரை கூறினாலும்; என்னே நீ எண்ணலையே - ஏனோ நீ சிந்தித்துப் பார்க்க மறுக்கின்றாயே; நின் தானைக்கு மேல் என்னும் நிலை உளன் - உன் படைகளுக்குத் தலைவனாக உயர் நிலையில் இருந்த; கரன் என்பான் - கரன் என்னும் வீரன்; தன் தானை - தன் சேனைகளோடும்; திண் தேரொடும் மாள - வலிமை மிக்க தேர்ப் படைகளோடும் அழியும்படி; தனு ஒன்றால் கொன்றான் - ஒப்பற்ற தன் வில்லால் கொன்ற இராமன்; முற்றும் கொல்ல- அரக்கர் இனம் முழுதையும் அழிக்க; மனத்தில் குறி கொண்டான் - இப்போது மனத்திற் கருதி இருக்கின்றான்; அம்மா - இந்நிலை இரங்கத்தக்கது. கரன் முதலியோரை அழித்தமை அவன் 'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன்' என்பதைக் காட்டும். அவ்வாறிருந்தும் நீ அறிவு பெற்றாய் இல்லை என்றான் மாரீசன். 14 |