3252.'மாண்டார், மாண்டார்; நீ இனி
     மாள்வார் தொழில் செய்ய
வேண்டா, வேண்டா; செய்திடின்,
     உய்வான் விதி உண்டோ?
ஆண்டார் ஆண்டார் எத்தனை
     என்கேன்? அறம் நோனார்,
ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்?
     எல்லாம் இலர் அன்றோ?

    மாண்டார் மாண்டார் - ஏற்கெனவே இறந்தவர்கள் இறந்து
போயினர்; இனி நீ - இனிமேல் நீ; மாள்வார் தொழில் செய்ய -
மரணமுறப் போகின்றவர்கள் செயத் தக்க செயலைச் செய்ய; வேண்டா
வேண்டா -
(அருள் கூர்ந்து) முற்பட வேண்டாம்; செய்திடின் - நீ
அவ்வாறு செய்வாயானால்; உய்வான் விதி உண்டோ - தப்பிப் பிழைக்க
வழியும் உண்டோ? (இல்லை); ஆண்டார் ஆண்டார் - உனக்கு முன்னே
இவ்வுலகை ஆண்டு சென்றோர்; எத்தனை என்கேன் - எத்தனையென்று
கணக்குரைக்க முடியாது; அறம் நோனார் - அறத்தை நோற்காதவர்;
ஈண்டார் - நிலை பெற்று நின்றதில்லை; ஈண்டு ஆர் நின்றவர் -
(மேலும்) இவ்வுலகில்
அழியாது நிலைத்தாரும் யாரும் இல்லை; எல்லாம்
இலர் அன்றோ? -
எல்லாரும் இல்லாமல் மறைந்தவர்கள் தானே?

     அழிகின்றவர் செய்யும் செயலை நீயும் செய்யாதே. அறவழி
நிற்போரே உண்மையில் அழியாதார். மற்றொன்று, யாக்கை நிலையாமை
உணர்ந்து உண்மைகளைத் தேறுதல் வேண்டும் என மாரீசன் பலவாறு
அறம் கூறினான்.                                            16