3253. | 'எம்பிக்கும் என் அன்னைதனக்கும் இறுதிக்கு ஓர் அம்பு உய்க்கும் போர் வில்லிதனக்கும், அயல் நிற்கும் தம்பிக்கும், என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன்; கம்பிக்கும் என் நெஞ்சு, அவன் என்றே; கவல்கின்றேன். |
'எம்பிக்கும் - என் தம்பி சுபாகுவுக்கும்; என் அன்னை தனக்கும் - என் தாய் தாடகைக்கும்; இறுதிக்கு - உயிருக்கு அழிவு நேரும்படி; ஓர் அம்பு உய்க்கும் - ஒப்பற்ற தன் இராம பாணத்தை ஏவிய; போர் வில்லி தனக்கும் - போராற்றல் வாய்ந்த வில்லாளியான இராமனுக்கும்; அயல் நிற்கும் தம்பிக்கும் - அவன் அருகிலேயே இருக்கும் தம்பி இலக்குவனுக்கும்; என் ஆண்மை தவிர்ந்தே - என் வீரம் பின்னடைந்து; தளர்வுற்றேன் - மெலிந்துள்ளேன்; அவன் என்றே - அந்த இராமன் அல்லவா (உனக்கும் பகையாவான்) என்று; கம்பிக்கும் என் நெஞ்சு - என் மனமும் மிக நடுங்கும்; கவல்கின்றேன் - (விளைவு எண்ணிக்) கவலையும் கொள்ளுகின்றேன். 'முன்னர் ஏற்பட்ட அனுபவத்தால் இராமனின் வல்லமையை நான் அறிவேன். அதனால் கலங்குகின்றேன்' என்றான் மாரீசன்.17 |