3254. | ' "நின்றும், சென்றும், வாழ்வன யாவும் நிலையாவால்; பொன்றும்" என்னும் மெய்ம்மை உணர்ந்தாய்; புலை ஆடற்கு ஒன்றும் உன்னாய்; என் உரை கொள்ளாய்; உயர் செல்வத்து, என்றும், என்றும், வைகுதி; ஐயா! இனி' என்றான். |
'நின்றும் சென்றும் வாழ்வன யாவும் - தாவர சங்கமம் என்று கூறப்படும் நிலையியல் இயங்கியல் பொருள்கள் எவையும்; நிலையா - நிலைத்து நிற்கமாட்டா; பொன்றும் - அழிந்தே தீரும்; என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் - என்னும் உண்மையை நீ உணர்ந்திருக்கிறாய்; புலை ஆடற்கு ஒன்றும் உன்னாய் - தீயன செய்தற்குச் சிறிதும் சிந்தியாதவனாய்; என் உரை கொள்ளாய் - என் பேச்சைக் கேட்பாயாக; இனி ஐயா - இனிமேலேனும், தலைமைக்கு உரியாய்; உயல் செல்வத்து - ஓங்கிய செல்வங்களோடு; என்றும் என்றும் வைகுதி - எப்போதும் எந்நாளும் இனிதே வாழ்வாயாக; என்றான் - என (மாரீசன்) எடுத்துரைத்தான்; ஆல் - அசை. 'உலகில் எப்பொருளும் நிலையாமையை உணர்ந்து நன்னெறி நின்று நலமுடன் வாழ்க' என வேண்டினான் மாரீசன். இராவணனின் அருந்தவம், அது தந்த பெரு வாழ்வு. அறநெறி தவறுதலால் விளையும் அழிவு, இந்திரன் போன்றோர் காமத்தால் வீழ்ந்தமை, கரன் முதலியோரை அழித்த இராமன் வலிமை எனப் பல நிலைகளிலும் மாரீசன் சிந்தித்து அறிவுரை கூறினான்.18 |