இராவணன் மாரீசனை முனிதல்

கலி விருத்தம்

3255.' "கங்கை சடை வைத்தவனொடும்
     கயிலை வெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது ஆடு
     எழில் மணித் தோள்,
இங்கு ஓர் மனிதற்கு எளிய"
     என்றனை' என, தன்
வெங் கண் எரிய, புருவம்
     மீதுற, விடைத்தான்.

    (மாரீசன் அறிவுரை கேட்ட இராவணன்), 'கங்கை சடை வைத்த
வனொடும் -
கங்கையைத் தலையின் மீது வைத்திருக்கும்
சிவபெருமானோடு; கயிலை வெற்பு - கயிலையங்கிரியை; ஓர் அங்கையின்
எடுத்த -
உள்ளங்கை ஒன்றால் எடுத்த; எனது ஆடு எழில் மணித்
தோள் -
என்னுடைய அழகு பொலியும் மாணிக்கத் தோள்கள்; இங்கு ஓர்
மனிதற்கு எளிய -
இவ்வுலக மானுடன் ஒருவனுக்கு இளைத்து விட்டன;
என்றனை என - என்று கூறிவிட்டாயே என்று; தன் வெங் கண் எரிய -
தன் கொடிய கண்களில் நெருப்புத் தவழ; புருவம் மீதுற - புருவங்கள்
சினத்தால் மேலுயர; விடைத்தான் - பெருஞ் சினம் அடைந்தான்.

     கயிலையங்கிரி எடுத்தவனுக்கு மானுடன் வலியவன் ஆவானோ
என்றான் இராவணன்.                                          19