3256. | 'நிகழ்ந்ததை நினைத்திலை; என் நெஞ்சின் நிலை, அஞ்சாது இகழ்ந்தனை; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை, ஐயா! புகழ்ந்தனை; தனிப் பிழை; பொறுத்தனென் இது' என்றான். |
'நிகழ்ந்ததை நினைத்திலை - (நம் குலத்துக்கு) நேர்ந்த அவமானத்தை நீ எண்ணவில்லை; என் நெஞ்சின் நிலை - என் மன உறுதி நிலையை; அஞ்சாது இகழ்ந்தனை - சற்றும் பயமின்றி இகழ்ச்சி செய்தாய்; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் - என் தங்கை சூர்ப்பணகையின் முகத்தையெல்லாம்; அகழ்ந்த வரை ஒப்புற அமைத்த வரை - குடைந்த மலை போலாகும்படி தீமை செய்தவரை; புகழ்ந்தனை - புகழ்ந்தும் பேசினாய்; ஐயா - ஐயனே!; தனிப்பிழை இது - இப் பெருங் குற்றத்தை; பொறுத்தனென் - மன்னித்தேன்; என்றான் - என இராவணன் கூறினான். குலப்பழி பொறுத்தல், இராவணன் ஆற்றலை இகழ்தல், தங்கைக்குத் தீமை செய்தாரைப் புகழ்தல் என்பன தனிப்பிழை என்றான் இராவணன்.20 |