மீண்டும் மாரீசன் கூறுதல் 3257. | தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை, பின்னை முனிவுற்றிடும் எனத் தவிர்தல் பேணான் 'உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய்; என்னை முனிவுற்றிலை; இது என்?' என இசைத்தான். |
தன்னை முனிவுற்ற - தன் மீது சினம் கொண்ட; தறுகண் - வீரம் உடையவனும்; தகவு இலோனை - பெருமை இல்லாதவனுமான இராவணனை; பின்னை முனிவுற்றிடும் எனத் - மேலும் தன் மீது கோபம் கொள்ளுவான் என்பதனால்; தவிர்தல் பேணான் - அறிவுரை கூறாது விலக விரும்பாதவனாய்; 'உன்னை முனிவுற்று - உன்னோடு நீயே சினம் கொண்டு; உன் குலத்தை முனிவுற்றாய் - உன் குலத்தோடும் சினம் கொண்டாய்; (உண்மையில்); என்னை முனிவுற்றிலை - என்னோடு சினமுற்றாய் இல்லை; இது என் - ஏன் இவ்வாறு செய்கிறாய்'; என இசைத்தான் - என்று கேட்டான். உன் சினம் எனக்குச் செய்யும் அழிவினும் உனக்கும் குலத்துக்கும் அழிவு தருவதாகும் என மாரீசன் சுட்டிக் காட்டுகிறான். 21 |