3258.'எடுத்த மலையே நினையின், "ஈசன்,
     இகல் வில்லாய்
வடித்த மலை, நீ இது, வலித்தி"
     என, வாரிப்
பிடித்த மலை, நாண் இடை பிணித்து
     ஒருவன் மேல்நாள்
ஒடித்த மலை, அண்ட முகடு உற்ற
     மலை அன்றோ?

    எடுத்த மலையே நினையின் - கயிலையங்கிரியை எடுத்ததையே
பெரிதாக நீ கருதினால்; ஈசன் இகல் வில்லாய் வடித்த மலை - இது
சிவபெருமான் முன்பு வளைத்து வில்லாய்ப் பிடித்த மேருமலை போன்றது;
நீ இது வலித்தி என - இதனை நீ வளைப்பாயாக (என்று சனகன் கூற);
வாரிப் பிடித்த மலை - அள்ளியெடுத்துப் பிடித்த மலைக்கு நிகரானதும்;
ஒருவன் - ஒப்பற்ற இராமன் (அன்று); நாணிடைப் பிணித்து - நாண்
கயிற்றைப் பற்றி; மேல் நாள் - முன்னொருநாள்; ஒடித்த மலை - ஒடித்த
மலைக்கு நிகரானதுமான வில்; அண்ட முகடு - உச்சி வானத்தை; உற்ற
மலை அன்றோ -
தழுவிய மேரு மலை போன்றதே அன்றோ?

     நீ எடுத்தது கயிலை மலை. ஆனால் இராமன் ஒடித்த வில் அதனினும்
மேலான மேருமலை போன்றது. இதனால் வலிமையினை ஒப்பிட்டுப் பார்க்க
வேண்டுகிறான். சொற்பொருட் பின்வருநிலை அணி.                  22