3259.'யாதும் அறியாய்; உரை கொளாய்;
     இகல் இராமன் 
கோதை புனையாமுன், உயிர்
     கொள்ளைபடும் அன்றே;
பேதை மதியால், "இஃது ஓர் பெண்
     உருவம்" என்றாய்;
சீதை உருவோ? நிருதர் தீவினை
     அது அன்றோ?

    'யாதும் அறியாய் - இராமன் வலிமை முதலானவற்றை முழுதும்
அறியாதவன் நீ; உரை கொளாய் - எடுத்துச் சொன்னாலும் உணர
மறுக்கிறாய்; இகல் இராமன் கோதை புனையா முன் - உன் பகையாய் நீ
கருதும் இராமன் போர் புரியத் தும்பை மாலை சூடு முன்; உயிர்
கொள்ளை படும் அன்றே -
அவன் பகைவர் உயிர் சூறையாடப்படும்
அன்றோ?; பேதை மதியால் - அறியாமை கொண்ட மதியால்; இஃது ஓர்
பெண் உருவம் என்றாய் -
(சீதையை) ஒரு மனிதப் பெண்ணாக
மதித்திருக்கின்றாய்; அது சீதை உருவோ? - உண்மையில் அது சீதையின்
வடிவமோ? (அன்று); நிருதர் தீவினை அன்றோ - அரக்கர் இழைத்த
பாவத்தின் வடிவம் அன்றோ?'

     தானும் அறியான், சொல் புத்தியும் கேளான் என இராவணனை
இகழ்ந்தான் மாரீசன். இராமன் போருக்கு மாலை சூடு முன்பே பகைவர்
உயிரிழப்பர் என அவன் ஆற்றலின் மிகுதி கூறினான். கோதை - மாலை.
இங்கே அதிரப் பொருவதற்கு அடையாளமாகிய தும்பைப் பூ மாலை.23