3260. | ' "உஞ்சு பிழையாய் உறவினோடும்" என உன்னா, நெஞ்சு பறைபோதும்; அது நீ நினையகில்லாய்; அஞ்சும் எனது ஆர் உயிர்; அறிந்து அருகு நின்றார், நஞ்சு நுகர்வாரை, "இது நன்று" எனலும் நன்றோ? |
"உஞ்சு பிழையாய் உறவினோடும் - உன் உறவினரோடு நீயும் தப்ப முடியாது; என உன்னா - என்று எண்ணும் அளவில்; நெஞ்சு பறை போதும் - நெஞ்சம் பறை கொட்டி அறிவிக்கும் நிலையில்; எனது ஆருயிர் அஞ்சும் - என்அரிய உயிர் பதைக்கின்றது; அது நீ நினையகில்லாய் - நீ அதனைக் கருத்தில் எண்ணாதிருந்தாய்; நஞ்சு நுகர்வாரை - விடம் அருந்துகின்றவர்களை; அறிந்து அருகு நின்றார் - அறிந்து பக்கத்தில் நின்றோர்; இது நன்று - உங்கள் செயல் நன்று; எனலும் நன்றோ - என்று கூறுதலும் நல்ல செயலாகுமா?" நீ நஞ்சு அருந்துவது போல் தீமை செய்யக் கருதுகையில், அதனை அறிந்த நான் நன்று எனப் பாராட்டல் சரியாகுமா எனக் கேட்டான் மாரீசன் நினைகில்லாய் - எண்ணும் ஆற்றல் இல்லாதவனாயினாய். (இல் - ஆற்றலை உணர்த்த வரும் இடைச்சொல்.) 24 |