3261.'ஈசன் முதல் மற்றும் இமையோர்
     உலகும், மற்றைத்
தேசம் முதல் முற்றும், ஓர்
     இமைப்பின் உயிர் தின்ப-
கோசிகன் அளித்த கடவுட்
     படை, கொதிப்போடு
ஆசு இல, கணிப்பு இல, இராமன்
     அருள் நிற்ப,

    ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் - சிவபெருமான் முதல்
தேவர் உலகு வரை; மற்றைத் தேசம் முதல் முற்றும் - வேறு
பகுதிகளையும் சேர்த்து முழுவதிலுமாய்; கோசிகன் அளித்த கடவுட் படை-
விசுவாமித்திர முனிவனால் வழங்கப்பட்ட தெய்வ அம்புகள்; கொதிப்போடு-
பொங்கும் அனலோடு; ஓர் இமைப்பின் உயிர் தின்ப - இமைப்
பொழுதில் உயிரைப் பருகி முடிக்கும் வல்லமை உடையன; ஆசில -
குற்றம் (தோல்வி) அறியாதவை; கணிப்புஇல் - கணக்கில்லாதவை; இராமன்
அருள் நிற்ப -
இராமபிரானிடம் (ஏவல் பூண்டு) அருள் காத்து
நிற்பனவாம்.

     தாடகை வதம் முடிந்து வேள்வி காத்தபின் விசுவாமித்திரரும்,
முனிவரும் அளித்த தெய்வப் படைகள் பல இராமனிடம் பொருந்தி
உள்ளன. இது குறித்துப் பால காண்டம் வேள்விப் படலம் (394, 395, 396)
கௌசிகன் - விசுவாமித்திர முனிவர். குசிகன் குலத்தில் பிறந்தோன்.   25