3263. | என்ன, உரை அத்தனையும், எத்தனையும் எண்ணிச் சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான்: 'அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய்; உன்னை, ஒருவற்கு ஒருவன் என்று உணர்க்கை நன்றே? |
என்ன, உரை அத்தனையும் - என்று மாரீசன் சொன்ன கூற்றுகள் அனைத்தையும்; எத்தனையும் எண்ணிச் சொன்னவனை - சிறிதேனும் எண்ணிப் பார்க்கும்படிக் கூறிய மாரீசனை; ஏசின - இகழ்ந்த; அரக்கர்பதி சொன்னான் - அரக்கர் தலைவனாகிய இராவணன் கூறலானான்; 'அன்னை உயிர் செற்றவனை - உன் தாய் தாடகையின் உயிரை அழித்தவனை; அஞ்சி உறைகின்றாய் - எண்ணி அச்ச முற்று இன்னும் உயிர்வாழ்கின்றாய்; உன்னை - (அப்படிப்பட்ட) உன்னை; ஒருவற்கு ஒருவன் என்று - ஓர் ஆண்மையாளன் என்று; உணர்கை நன்றோ - நினைப்பது பொருத்தமாகுமா? (ஆகாது என்றபடி). தாயைக் கொன்றவனைப் பழிக்குப் பழி வாங்காத நீயும் ஆண் மகன்தானா என மாரீசனிடம் இராவணன் வினவினான். ஒருவற்கு ஒருவன் - இணையான சிறப்புள்ள வீரன் என மதித்தல் எனப் பொருள் பட்டது.27 |