3265. | 'மூஉலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன்; மேவலர் கிடைக்கின், இதன்மேல் இனியது உண்டோ? ஏவல் செயகிற்றி, எனது ஆணை வழி; எண்ணிக் காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ? |
மூவுலகினுக்கும் - மேல், நடு, கீழ் எனும் மூன்று உலகங்களுக்கு; ஒரு நாயகம் - தனி நாயகனாய்; முடித்தேன் - வெற்றி பெற்று முடித்தேன்; (அத்தகைய எனக்கு); மேவலர் கிடைக்கின் - (இன்னும் வெல்லுதற்குப்) பகைவர் கிடைப்பாராயின; இதன் மேல் இனியது உண்டோ - அதனினும் இனிதான ஒன்று வேறு உண்டோ; எனது ஆணை வழி ஏவல் செயகிற்றி - என் கட்டளைப்படி ஏவல் செய்வாயாக; எண்ணிக்காவல் செய் அமைச்சர் கடன் - சிந்தனை செய்து அரசுக்குப் பாதுகாப்புச் செய்யும் அமைச்சர் பொறுப்பை; நீ கடவது உண்டோ - நீ செய்யக் கருதுதல் பொருந்துமோ? (பொருந்தாது). என் பணி செய்வதே உன் கடமை. அறிவுரை மொழியும் அமைச்சர் பொறுப்பு உனக்கு உரியதன்று என்று மாரீசனுக்கு இராவணன் கூறினான். (அறிவுடைய அமைச்சன் நீ அல்லை) (7361) எனக் கும்பகருணனிடமும் இராவணன் கூறுதல் ஒப்புநோக்கத் தக்கது.29 |