3266. | 'மறுத்தனை எனப் பெறினும், நின்னை வடி வாளால் ஒறுத்து, மனம் உற்றது முடிப்பென்; ஒழிகல்லேன்; வெறுப்பன கிளத்தலுறும் இத் தொழிலை விட்டு, என் குறிப்பின்வழி நிற்றி, உயிர்கொண்டு உழலின்' என்றான். |
மறுத்தனை எனப் பெறினும் - என் கட்டளையை நீ மறுத்தாய் என்றாலும்; நின்னை - உன்னை; வடிவாளால் - என் கூர்மையான வாளால்; ஒறுத்து - வெட்டி; மனம் உற்றது முடிப்பென் - என் மனம் கருதியதை நிறைவேற்றுவேன்; ஒழிகல்லேன் - இந்நிலையிலிருந்து விலகமாட்டேன்; வெறுப்பன - நான் வெறுக்கும் அறிவுரைகளை; கிளத்தலுறும் இத்தொழிலை விட்டு - எடுத்துக் கூறும் இந்தச் செயலை விட்டொழித்து; உயிர் கொண்டு உழலின் - அவ்வாறு செய்தால் உயிரோடு பிழைக்கலாகும்; என் குறிப்பின் வழி நிற்றி - என் கருத்தின் வழியே நின்று செயல் புரிவாயாக; என்றான்- என்று (இராவணன் மாரீசனுக்குக்) கூறினான். அறிவுரைகளை ஏற்கும் நிலையில் அவன் இல்லை என்பதையும், முடிவுகளை எடுத்த நிலையில் உள்ளான் என்பதையும் இராவணன் பேச்சுப் புலப்படுத்துகின்றது. 30 |