3268. உன்வயின் உறுதி நோக்கி, உண்மையின்
     உணர்த்தினேன்; மற்று,
என்வயின் இறுதி நோக்கி, அச்சத்தால்
     இசைத்தேன் அல்லேன்;
நன்மையும் தீமை அன்றே, நாசம்
     வந்து உற்ற போது?
புன்மையின் நின்ற நீராய்!
     செய்வது புகல்தி' என்றான்.

    'உன்வயின் உறுதி நோக்கி - (இராவணனாகிய) உன் நலத்தினை
நாடி; உண்மையின் உணர்த்தினேன் - உண்மையாகவே எடுத்துக்
கூறினேன்; மற்று - அவ்வாறன்றி; என்வயின் இறுதி நோக்கி - எனக்கு
அழிவு நேரும் என்று கருதி; அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் -
பயம் காரணமாக நான் அறிவுரை கூறினேன் இல்லை; நாசம் வந்து
உற்றபோது -
அழிவு நெருங்கி வரும் நேரத்தில்; நன்மையும் தீமை
அன்றே -
நல்லது சொன்னாலும் அது தீமையாகவே கருதப்படும்
அல்லவா?; புன்மையின் நின்ற நீராய் - தீய நெறியில் செல்லும் தன்மை
உடையவனே; செய்வது புகல்தி - நான் செய்ய வேண்டியதைச் செப்புக';
என்றான் - என மாரீசன் (உடன்பட்டுப்) பேசினான்.                32