சீதையை அடையச் செய்திடும் சூழ்ச்சி 3269. | என்றலும், எழுந்து புல்லி ஏறிய வெகுளி நீங்கி, 'குன்று எனக் குவிந்த தோளாய்! மாரவேள் கொதிக்கும் அம்பால் பொன்றலில் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ? தென்றலைப் பகையைச் செய்த சீதையைத் தருதி' என்றான். |
என்றலும் - இவ்வாறு மாரீசன் கூறியதும்; எழுந்து புல்லி - இராவணன் எழுந்து அவனைத் தழுவி; ஏறிய வெகுளி நீங்கி - மேற் பொங்கிய சினம் மாறி; 'குன்று எனக் குவிந்த தோளாய் - மலையெனத் திரண்ட தோள்களை உடையவனே; மாரவேள் கொதிக்கும் அம்பால் - மன்மதன் எய்த வேதனைக் கணையால்; பொன்றலில் - இறப்பதை விட; இராமன் அம்பால் - இராமனுடைய அம்பினால்; பொன்றலே புகழ் உண்டு அன்றோ - இறத்தலால் புகழ் ஏற்படும் அல்லவா?; தென்றலைப் பகையைச் செய்த - இனிய தென்றலையும் கொடிய பகையாக மாற்றிவிட்ட; சீதையைத் தருதி - சீதையை எனக்காகக் கொண்டு தருவாய்; என்றான் - என்று இராவணன் வேண்டினான். காமன் அம்பால் சாவதை விட இராமன் அம்பால் சாவது மேல் என்றான் இராவணன் : எவ்வாறாயினும் பின்னர் நிகழவிருப்பதை முன்னரே குறிப்பால் கூறுதல் கருதத்தக்கது. 33 |