3270. ஆண்டையான் அனைய கூற,
     'அரக்கர் ஓர் இருவரோடும்,
        பூண்ட என் மானம் தீரத்
     தண்டகம் புக்க காலை,
தூண்டிய சரங்கள் பாய, துணைவர்
     பட்டு உருள, அஞ்சி
மீண்டயான், சென்று செய்யும் வினை
     என்கொல்? விளம்புக!" என்றான்.

    ஆண்டையான் அனைய கூற - அங்கிருந்த இராவணன் இவ்வாறு
சொல்லியதும்; அரக்கர் ஓர் இருவரோடும் - இரண்டு அரக்கர் துணைவர;
பூண்ட என் மானம் தீர - (தாயைக் கொன்ற) இராமனைப் பழி வாங்கும்
வைராக்கியம் நிறைவேறுதற்காக; தண்டகம் புக்க காலை -
தண்டகாரணியத்துக்கு (ஒரு சமயம் நான்) சென்ற போது; தூண்டிய
சரங்கள் பாய -
(இராமன் வில்லிலிருந்து) விடுபட்ட அம்புகள் பாய்ந்துவர;
துணைவர் பட்டு உருள - என்னோடு துணைக்கு வந்த அரக்கர் இறந்து
விழ; அஞ்சி மீண்ட யான் - பயந்து திரும்பி வந்த நான்; சென்று
செய்யும் -
இப்போது சென்று செய்யத்தக்க; வினை என்கொல் - பணி
யாது?; விளம்புக - கூறுக; என்றான் - என (மாரீசன்) கேட்டான்.

     கோதமன் வேள்வியின்போது இராமன் கணையால் கடலில்
எறியப்பட்டான். (444) அதனை மாரீசன் இங்கு நினைவு கூர்கிறான்.

     தண்டகாரண்யத்தில் மான் வடிவில் சென்று, இராமனைத் தாக்க
மாரீசன் முயன்றதாக ஒரு செய்தி முதல் நூலில் கூறப்பட்டுள்ளது. இங்குக்
கதைப் போக்கில் குறிக்கப் பெற்றது.

     'முன் இருமுறை இராமன் அம்புக்குத் தப்பிப் பிழைத்த நான் மீண்டும்
என்ன செய்ய இருக்கிறது' என மாரீசன் தன் செயலற்ற நிலையைக்
கூறினான்.                                                   34