3271. | ஆயவன் அனைய கூற, அரக்கர் கோன், 'ஐய! நொய்து உன் தாயை ஆர் உயிர் உண்டானை, யான் கொலச் சமைந்து நின்றேன்; போய், ஐயா! புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ? மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை' என்றான். |
ஆயவன் அனைய கூற - மாரீசன் அவ்வாறு மொழியவும்; அரக்கர் கோன் - அரக்கர் தலைவனான இராவணன்; 'ஐய - ஐயனே; உன் தாயை நொய்து ஆருயிர் உண்டானை - உனது தாயான தாடகையை இழிவான முறையில் மிக எளிதில் அழித்தவனை; கொல - கொல்லுதற்கு; யான் சமைந்து நின்றேன் - நான் ஒருப்பட்டு நிற்கின்றேன்; ஐயா போய்ப் புணர்ப்பது என்னே - ஐயனே, போய்ச் செயத் தக்கது என்ன; என்பது - என நீ கேட்பது; பொருந்திற்று ஒன்றோ - பொருத்தமான கேள்விதானா?; அவளை - அச்சீதையை; மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் - மாயம் செய்து வஞ்சனையால் அன்றோ பற்றுதல் வேண்டும்; என்றான் - என்று (இராவணன்) கூறினான். 'என்ன செய்வது என்பதும் ஒரு கேள்வியா? போரிடுவதில்லை என முன்னமே சொல்லியிருப்பதால் மாய வஞ்சமே வழி' என இராவணன் கூறினான். 35 |