3272. | 'புறத்து இனி உரைப்பது என்னே? புரவலன் தேவிதன்னைத் திறத்துழி அன்றி, வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்; அறத்து உளது ஒக்கும் அன்றே? அமர்த்தலை வென்று கொண்டு, உன் மறத் துறை வளர்த்தி, மன்ன!' என்ன மாரீசன் சொன்னான். |
மன்ன - வேந்தனே; புறத்து இனி உரைப்பது என்னே - இனி மேல் வேறு கூறுதற்கு யாது உள்ளது!; புரவலன் தேவி தன்னை - உலகு காக்கும் இராமனின் மனைவியை; திறத்துழி அன்றி - உன் திறன் காரணமாக அன்றி; வஞ்சித்து எய்துதல் - வஞ்சனையால் அடைதல் என்பது; சிறுமைத்து ஆகும் - உன் தகுதிக்குத் தாழ்வானது ஆகும்; அமர்த்தலை வென்று கொண்டு - போரில் இராமனை வெற்றி கொண்டு; உன் மறத்துறை வளர்த்தி - உன் வீரத் தகுதியை வளர்த்துக் கொள்வாயாக; அறத்து உளது ஒக்கும் அன்றே - அவ்வாறு செய்வது நீதியின் மரபுக்குப் பொருந்துவதும் ஆகும் அல்லவா?; என்ன மாரீசன் சொன்னான் - என்று மாரீசன் இராவணனிடம் கூறினான். உன் தகுதிக்கும் பெருமைக்கும் வஞ்சனை தக்கதன்று; வீரத்தால் வெல்லுவதே மேன்மை என்று மாரீசன் கூறினான். 36 |