3274.'தேவியைத் தீண்டாமுன்னம், இவன்
     தலை சரத்தின் சிந்திப்
போம்வகை புணர்ப்பன் என்று, புந்தியால்
     புகல்கின்றேற்கும்
ஆம் வகை ஆயிற்று இல்லை; யார்
     விதி விளைவை ஓர்வார்?
ஏவிய செய்வது அல்லால், இல்லை வேறு
     ஒன்று' என்று எண்ணா,

    தேவியைத் தீண்டா முன்னம் - இராமன் துணைவியான சீதையைத்
தொடு முன்னரே; இவன் தலை சரத்தின் சிந்தி - இவ்விராவணன்
தலைகளை இராமன் அம்பால் வீழ்த்தி; போம் வகை புணர்ப்பன் - விழும்
வகையைச் செய்யலாம்; என்று புந்தியால் புகல்கின்றேற்கும் - என்று
தந்திரத்தால் சொல்ல வல்ல எனக்கும்; ஆம் வகை ஆயிற்று இல்லை -
(அதனைச் செய்து) பிழைக்கும் வழி புலனாகவில்லை; விதி விளைவை
ஓர்வார் யார்? -
விதியின் செயல்பாட்டை முற்றும் அறிந்தவர் யார்?;
ஏவிய செய்வது அல்லால் - இராவணன் இட்ட கட்டளையை
நிறைவேற்றுவதல்லாமல்; வேறு ஒன்று இல்லை - வேறு செய்தற்கு ஏதும்
வழி இல்லை; என்று எண்ணா- என்று சிந்தித்தவனாய்.........

     (அடுத்த பாடலில் கருத்து முடியும்) தொடக்கத்தில் இராமனுடன் போர்
செய் என்று மாரீசன் தூண்டியது ஒருவகைச் சூழ்ச்சியே. போர் வருமாயின்
இராவணன் மடிவான். நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்பது அவன்
திட்டம். அது பலிக்கவில்லையென்பதால் இராவணன் ஏவலைச் செய்ய
முடிவு செய்கிறான்.                                            38