3275. | 'என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது? இயம்புக' என்றான், 'பொன்னின் மான் ஆகிப் புக்கு, பொன்னை மால் புணர்த்துக' என்ன, 'அன்னது செய்வென்' என்னா, மாரீசன் அமைந்து போனான்; மின்னு வேல் அரக்கர்கோனும் வேறு ஒரு நெறியில் போனான். |
'என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது? - நான் எவ்வகையான பெரிய மாயம் இங்கே செய்ய வேண்டும்?; இயம்புக என்றான் - கூறுக என மாரீசன் கேட்டான் (அதற்கு இராவணன்); பொன்னின் மானாகிப் புக்கு - ஒரு பொன் மானாகக் (காட்டில்) நுழைந்து; பொன்னை - பொன் போன்ற சீதைக்கு; மால் புணர்த்துக - மயக்கத்தை ஏற்படுத்துக; என்ன - என்று திட்டம் தந்தான்; 'அன்னது செய்வென் என்னா - அவ்வாறே செய்கின்றேன் என்று; மாரீசன் அமைந்து போனான் - மாரீசன் ஏற்றுக் கொண்டு புறப்பட்டான்; மின்னு வேல் அரக்கர் கோனும் - ஒளிவீசும் வேல் ஏந்திய அரக்கர் தலைவனும்; வேறொரு நெறியில் போனான் - மற்றொரு திசையில் புறப்பட்டுச் சென்றான். மாரீசனுக்கு மாயா மார்க்கம் உணர்த்தப்படவே, மாயமான் ஆதற்கு அவன் செல்லலானான். 39 |