மாரீசன் மனநிலையும் செயலும்

கலிவிருத்தம்

3276.மேல்நாள் அவர் வில்
     வலி கண்டமையால்,
தான் ஆக
     நினைந்து சமைந்திலனால்;
'மான் ஆகுதி'
     என்றவன் வாள் வலியால்
போனான் மனமும்,
     செயலும் புகல்வாம்.

    மேல் நாள் - முன் காலத்தில்; அவர் வில்வலி கண்டமையால் -
இராமலக்குவர் வில்லாற்றலைக் கண்டறிந்திருப்பதால்; தானாக நினைந்து -
(மாயமான் ஆதற்குத்) தானாகவே எண்ணி; சமைந்திலன் - மாரீசன் முடிவு
செய்தான் இல்லை; மான்ஆகுதி - மாய மான் வடிவினை எடு; என்றவன்
வாள் வலியால் போனான் -
என ஆணையிட்ட இராவணன் வாளின்
வலிமையை அறிந்திருந்ததால் அவன் ஆணையை ஏற்றுக் கொண்டவனாகிய
மாரீசனது; மனமும் செயலும் புகல்வாம் - எண்ணத்தையும் செய்த
செயல்களையும் இனிக் கூறுவோம்.

     கவிக்கூற்று. போனான் - வினையாலணையும் பெயர். ஆல்- அசை. 40