3280. கலைமான் முதல் ஆயின
     கண்ட எலாம்,
அலை மானுறும் ஆசையின்,
     வந்தனவால்-
நிலையா மன, வஞ்சனை,
     நேயம் இலா,
விலை மாதர்கண் யாரும்
     விழுந்தெனவே.

    நிலையா மன(ம்) - யாரிடத்தும் உறுதியாக நில்லாத மனமும்;
வஞ்சனை - வஞ்சிக்கும் பாங்கும்; நேயம் இலா - உண்மையான அன்பும்
இல்லாத; விலைமாதர்கண் - கணிகையரிடத்தில்; யாரும் விழுந்தெனவே-
காமமுற்றார் மனம் இழந்தாற் போல; கலைமான் முதல் ஆயின கண்ட
எலாம் -
கானகத்தில் உள்ள கலை மான் முதலாக அப்பொன் மானைப்
பார்த்த விலங்குகள் யாவும்; அலை மானுறும் - கடல் போன்று;ஆசையின்
வந்தன -
பெருகிய ஆவலுடன் வந்து சூழ்ந்தன; ஆல் -அசை.

     விலைமகளிர் போலப் பொன்மான் அமைய, அம் மகளிரிடம் ஆசை
கொண்டார் போலப் பிற விலங்குகள் வந்தன என்றார். உவமையணி.

     விலைமகளிர் யார் மீதும் அன்பு வையார் அது போல்
பொன்மானுக்கும் பிற விலங்குகளின் மீது பற்றில்லை. விலை மகளிருக்குப்
பொன் மீது மட்டும் பற்று உண்டு. மாயமானுக்கும் பொன்னாகிய சீதை மீது
நாட்டம் உண்டு.                                              44