3281.பொய் ஆம் என ஓது
     புறஞ்சொலினால்
நையா இடை
     நோவ நடந்தனளால்-
வைதேவி, தன் வால் வளை
     மென் கை எனும்
கொய்யா மலரால் மலர்
     கொய்குறுவாள்.

    பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் - (இவள் இடை)
பொய்யே ஆகும் என்று அயலாளர் கூறுவதற்கேற்ப; நையா - வருத்தம்
கொண்டு விளங்கும்; இடை நோவ - இடை நோகும்படி; நடந்தனள் -
நடப்பவளாய்; வைதேவி - சீதை; தன் வால்வளை மென்கை எனும் -
ஒளி பொருந்திய வளையல் அணிந்த தன் மெல்லிய கரங்கள் என்னும்;
கொய்யா மலரால் - பறிக்கப்படாத மலர்களால்; மலர் கொய் குறுவாள் -
கானகத்தில் பூப்பறிக்க முற்பட்டாள். ஆல் - அசை.

     இடை பொய் எனல் கவிதை மரபு. இதனால் இடைக்கு வருத்தம்
ஏற்பட்டதாகக் கற்பித்தார். விதேக அரசன் குலமகள் என்பதால் வைதேகி
எனப்பட்டாள். இங்கு வைதேவி எனத் திரிந்து வந்தது. கையெனும்
கொய்யா மலர்' - பறவாக் கொக்கு என மாமரம் அழைக்கப்பட்டாற்போல்
கரங்களை இவ்வாறு கூறினார். கொய்யா மலர் மலர் கொய்தது எனக்
கவிதையழகு மிளிர முரண் அணியுடன் கூறினார். மூன்றாம் வரியில்
'வய்தேவி' என ஓசை எழுதலால் எதுகை பிழையாதாயிற்று.            45