3282. | உண்டாகிய கேடு உடையார், துயில்வாய் எண் தானும் இயைந்து இயையா உருவம் கண்டார் எனலாம் வகை, கண்டனளால்- பண்டு ஆரும் உறா இடர்பாடுறுவாள். |
உண்டாகிய கேடு உடையார் - நிச்சயம் அழிவு நேரும் என்ற நிலையில் உள்ளார்; துயில்வாய் - உறக்கம் கொள்ளுகையில்; எண் தானும் இயைந்து இயையா உருவம் - எண்ணத்தில் ஒரு போதும் இசைந்திராத விசித்திர வடிவங்களை; கண்டார் எனலாம் வகை - கனவிற் கண்டார்கள் என்று கூறத்தக்க முறையில்; பண்டு ஆரும் உறா இடர் - எக்காலத்தும் முன்பு எவரும் படாத துயரம்; பாடு உறுவாள் - பட இருக்கின்றவளான சீதை; கண்டனள் - மாய மானைக் கண்டாள்; (ஆல் - அசை) துன்பம் வருமுன் கனவு போன்ற முன் சகுனங்கள் தோன்றினாற் போலச் சீதை முன் பொன்மான் விபரீதம் விளைவிக்கத் தோன்றியது.46 |