மானைக் கண்டு மயங்கிய சீதை இராமனை அடைதல் 3284. | நெற்றிப் பிறையாள் முனம் நின்றிடலும், முற்றிப் பொழி காதலின் முந்துறுவாள், 'பற்றித் தருக என்பென்' எனப் பதையா, வெற்றிச் சிலை வீரனை மேவினளால். |
நெற்றிப் பிறையாள் முனம் - இளம் பிறை போலும் நெற்றியை உடைய சீதை முன்; நின்றிடலும் - (மாய மான் வந்து) நிற்கவும்; முற்றிப் பொழி காதலின் - (அவள்) நிறைந்த ஆசை ததும்பி நிற்க; 'பற்றித் தருக' என்பென் - 'இம் மானைப் பிடித்துத் தரவேண்டும்' என்று இராமனைக் கேட்பேன்; எனப் பதையா - என உணர்ச்சி மிக்கவளாய்; (சீதை); வெற்றிச் சிலை வீரனை - வில்லால் வெற்றி கொள்ளும் வீரனாகிய இராமனை; முந்துறுவாள்; மேவினள் - அடைந்தாள். (ஆல் - அசை) 48 |