3285. | 'ஆணிப் பொனின் ஆகியது; ஆய் கதிரால் சேணில் சுடர்கின்றது; திண் செவி, கால், மாணிக்க மயத்து ஒரு மான் உளதால்; காணத் தகும்' என்றனள், கை தொழுவாள். |
(இராமனிடம் சென்று சீதை); 'ஆணிப் பொனின் ஆகியது - மாற்றுயர்ந்த பொன்னால் ஆனதும்; ஆய் கதிரால் சேணில் சுடர்கின்றது- சிறந்த ஒளியினால் தொலைவிலும் பளபளக்கின்றதும்; திண்செவி கால் - வலிய காதுகளும் கால்களும்; மாணிக்க மயத்து - சிவந்த மாணிக்கங்களால் ஆகியதுமான; ஒரு மான் உளது - ஒரு மான் காட்சி தருகின்றது; காணத் தகும் - அழகால் காண்பதற்கு இனிதானது; என்றனள்- என்று கூறியவளாய்; கைதொழுவாள் - (அதனைப் பற்றி அளிக்க வேண்டுமெனக் கருதி) கையால் வணங்கி நின்றாள்; ஆல் - அசை. அம் மான் வேண்டுமென வாயால் கூறாது உணர்த்திக் காட்டினாள். 49 |